பொள்ளாச்சி பாலியல் விவகாரம் 8 'யு டியூப்'களுக்கு ஐகோர்ட் தடை
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் 8 'யு டியூப்'களுக்கு ஐகோர்ட் தடை
ADDED : ஆக 26, 2025 10:58 PM
சென்னை:பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமனை தொடர்புபடுத்தி, அவதுாறு கருத்துக்களை தெரிவிக்க, 'யு டியூப் சேனல்'களுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த, 2019ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில், தங்க ளை தொடர்புபடுத்தி, அவதுாறு கருத்துக்களை வெளியிட, 'யு டியூப் சேனல்'களுக்கு தடை விதிக்க கோரியும், 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க கோரியும், முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் பி.அரவிந்த் ஸ்ரீவத்சா ஆஜரானார்.
இதையடுத்து நீதிபதி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஆகியோரை தொடர்புபடுத்தி, அவதுாறு கருத்துக்களை தெரிவிக்க, நக்கீரன் கோபால், வா.புகழேந்தி, நக்கீரன் யு டியூப் உள்ளிட்ட, எட்டு யு டியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

