பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பழனிசாமிக்கு முதல்வர் சவால்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பழனிசாமிக்கு முதல்வர் சவால்
ADDED : ஜன 10, 2025 11:52 PM
சென்னை:''பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததை நிரூபிக்க தயாரா?'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
முதல்வர் ஸ்டாலின்: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உடனடியாக தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் பின்னரும், அரசு மீது குற்றம்சாட்டி கொண்டிருந்தால், பொள்ளாச்சி விவகாரம் பற்றி பேச வேண்டியிருக்கும்.
பழனிசாமி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்தவுடன், 24 மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். பின், தலைமறைவாக இருந்த நான்காவது குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். இன்று வரை அவர்கள் சிறையில் உள்ளனர். நாங்கள் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டோம்.
முதல்வர்: அண்ணா பல்கலை விவகாரத்தில் புகார் கொடுக்கப்பட்ட உடனே குற்றவாளி கைது செய்யப்பட்டு, மறுநாளே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
ஆனால், பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் கொடுக்கப்பட்ட, 12 நாட்களுக்கு பின்னரே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்த, 12 நாட்களில் என்ன நடந்தது?
பழனிசாமி: பாலியல் வழக்கில் புகார் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுக்க முடியும். பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே, 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர்: மீண்டும் சொல்கிறேன். பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் கொடுத்த 12 நாட்களுக்கு பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதற்கான ஆதாரத்தை, நாளை சபாநாயகரிடம் நான் கொடுக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது உண்மையானால், அவரும் ஆதாரத்தை கொடுக்கட்டும்.
நான் சொல்வது தவறாக இருந்தால், எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதை ஏற்கிறேன். இல்லையெனில், நான் சொல்வதை அவர் ஏற்க தயாரா?
சபாநாயகர் அப்பாவு: முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஆதாரங்களை கொடுத்த பின், என் முடிவை தெரிவிக்கிறேன். இப்பிரச்னையை இதோடு முடித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.