எந்தெந்த பகுதிகளில் மண்வளம் மாசடைந்துள்ளது வரைபடம் தயாரிக்கிறது மாசு கட்டுப்பாடு வாரியம்
எந்தெந்த பகுதிகளில் மண்வளம் மாசடைந்துள்ளது வரைபடம் தயாரிக்கிறது மாசு கட்டுப்பாடு வாரியம்
ADDED : ஜன 03, 2025 03:04 AM
சென்னை:தொழிற்சாலை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், எந்தெந்த பகுதிகளில் மண் மாசடைந்துள்ளது என்பது குறித்த வரைபடம் தயாரிக்கும் பணிகளை, மாசு கட்டுப்பாடு வாரியம் துவக்கி உள்ளது.
தமிழகத்தில் விவசாயத்துக்காக, மண் வளம் குறித்த விபரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. கிராம வாரியாக மண் வளம் குறித்த தகவல் தொகுப்பு, வேளாண்மை துறை பயன்பாட்டில் உள்ளது.
அவசியம்
இதேபோன்று, கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ள, ஒவ்வொரு பகுதியிலும் மண்ணின் சுமை தாங்கும் திறன் குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.
அடுக்குமாடி கட்டடங்கள் மட்டுமல்லாது, சாதாரண கட்டடங்கள் கட்டும் போதும், மண் பரிசோதனை அவசியமாகிறது.
இந்நிலையில், தொழிற்சாலை கழிவுகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், திறந்த வெளியில் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது. இந்த காரணங்களால், மண் வளம் பாதிக்கப்படுகிறது.
துல்லிய தகவல்கள்
இதில், எந்தெந்த பகுதிகளில் மண் மாசு அடைந்துள்ளது என்ற விபரங்களை, வரைபட வடிவில் தொகுக்க, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள், மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் மண் வளம் மாசடைந்துள்ளது குறித்த வரைபடம் தயாரிக்க, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி, கோவை வேளாண் பல்கலையுடன் இணைந்து, இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கிராம வாரியாக மாசடைந்த மண் உள்ள பகுதிகள் குறித்த துல்லிய தகவல்கள், தனியார் நிறுவனம் வாயிலாக திரட்டப்பட்டு வருகின்றன. களநிலையில் தகவல் திரட்டும் பணிகள் முடிந்ததும், வரைபடம் தயாரிக்கப்படும்.
இதனால், எந்தெந்த பகுதியில், எந்த அளவுக்கு மண் மாசடைந்துள்ளது என்பது தெரியவரும். ஏற்கனவே ஏற்பட்ட மாசை சரி செய்வதற்கும், புதிதாக மாசு ஏற்படாமல் இருப்பதற்கும் இது பேருதவியாக இருக்கும். அடுத்த சில மாதங்களில், வரைபட தயாரிப்பு பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

