முருங்கை இலை, பூக்கள் உதிர்வை தடுக்க பாலிதீன் போர்வை போர்த்த திட்டம் தோட்டக்கலை துறை புதிய முயற்சி
முருங்கை இலை, பூக்கள் உதிர்வை தடுக்க பாலிதீன் போர்வை போர்த்த திட்டம் தோட்டக்கலை துறை புதிய முயற்சி
ADDED : செப் 29, 2024 01:40 AM

சென்னை:மழை மற்றும் பனியில் முருங்கை இலை மற்றும் பூக்கள் உதிர்வதை தடுத்து மகசூலை அதிகரிக்க, தோட்டக்கலை துறை புதிய முயற்சியை துவங்கவுள்ளது.
முருங்கை கீரை, பூக்கள், காய்கள் ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. மருத்துவப் பயன்பாட்டிற்காகவும், உணவு தேவைக்காகவும், முருங்கை கீரை, பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றை நேரடியாகவும், மதிப்பு கூட்டியும் விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
அதே நேரத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடைமுறையில் இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரை பனிப்பொழிவு காலம். இத்தகைய மழை மற்றும் பனிக் காலங்களில், மரங்களில் இருந்து முருங்கை இலை மற்றும் பூக்கள் அதிகளவில் உதிர்கின்றன.
இதனால், முருங்கைக்காய் மகசூல் குறைகிறது; விலையும் அதிகரிக்கிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய முயற்சியை தோட்டக்கலை துறை கையில் எடுத்துள்ளது.
இது குறித்து, தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் 1.28 லட்சம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில மாதங்களில் கீரை மற்றும் முருங்கைக்காய் மகசூல் குறைகிறது. முருங்கை கீரை, பூக்கள் உதிர்வதை தடுக்க, மரங்களுக்கு பாலித்தீன் போர்வை போர்த்தப்பட உள்ளது.
இதன் வாயிலாக, பருவமில்லா காலங்களில் உற்பத்தியை உறுதி செய்ய முடியும். சோதனை முயற்சியாக, சில மாவட்டங்களில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில், அக்டோபர் முதல் இம்முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.