பொங்கலுக்கும் சம்பளம் கிடைக்கலை; வேதனையின் விளிம்பில் வேளாண் துறை 'அட்மா' திட்ட பணியாளர்கள்
பொங்கலுக்கும் சம்பளம் கிடைக்கலை; வேதனையின் விளிம்பில் வேளாண் துறை 'அட்மா' திட்ட பணியாளர்கள்
ADDED : ஜன 14, 2025 11:26 PM
மதுரை; தீபாவளி, பொங்கலுக்கு கூட சம்பளம் வழங்காததால் வாழ்வாதாரத்தை இழந்து வேதனைப்படுவதாக வேளாண் துறையின் 'அட்மா' திட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் 60 : 40 சதவீத நிதி பங்களிப்புடன் 2012 ல் 'அட்மா' எனப்படும் (அக்ரிகல்சர் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் ஏஜன்சி) வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் வேளாண் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. வேளாண் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் உதவி தொழில்நுட்ப மேலாளர்களாகவும் (ஏ.டி.எம்.,) வேளாண் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மாதம் ரூ.25ஆயிரம் தொகுப்பூதியத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர்களாகவும் (பி.டி.எம்.) நியமிக்கப்பட்டனர். ஆண்டுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதால் பெரும்பான்மை மாநிலங்களில் உள்ள 'அட்மா' திட்ட பணியாளர்களுக்கு முறையான 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இத்திட்டம் வந்து 12 ஆண்டுகளாகியும் நிர்ணயிக்கப்பட்ட தொகுப்பூதியமே பெறுகின்றனர். அதிலும் ஆண்டில் பாதி மாதங்கள் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்கின்றனர் 'அட்மா' திட்ட பணியாளர்கள்.
அவர்கள் கூறியதாவது:
385 வட்டாரங்களில் மொத்தம் 1500 பணியாளர்கள் உள்ளோம். எங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது உட்பட பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசு மடை மாற்றுகிறது. இதனால் சம்பளம் பெறுவதில் தாமதமாகிறது. தற்போது வரை நேரடியாக வங்கிக்கணக்கில் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்களைப் போல கருவூலத்தில் இருந்து சம்பளம் பெறுவதற்காக பட்டியல் தயார் செய்தனர். அனைத்து தகவல்களையும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதற்காக சம்பளத்தை நிறுத்தி வைத்தனர். பணிகள் முடியாததால் திண்டுக்கல் உட்பட 13 மாவட்டங்களில் உள்ள பணியாளர்களுக்கு தீபாவளி முதல் தற்போது வரை சம்பளம் வழங்கப்படவில்லை.
கடன் வாங்கியே வாழ்வதா
தீபாவளிக்கும் சம்பளமின்றி கடன் வாங்கி சமாளித்தோம். பொங்கலுக்குள் 3 மாத சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் 25 மாவட்ட பணியாளர்களுக்கு மட்டுமே 3 நாட்களுக்கு முன் சம்பளம் வழங்கப்பட்டது. 13 மாவட்டங்களில் பணிபுரியும் எங்களுக்கு பொங்கலுக்கும் சம்பளம் கிடைக்கவில்லை.
எத்தனை மாதங்கள் கடன் வாங்கி குடும்பத்தை சமாளிக்க முடியும். தீபாவளி, பொங்கலுக்கு போனஸ் கூட இதுவரை தமிழக அரசு வழங்கியதில்லை.
எங்களை வைத்து வேளாண் துறையின் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் தமிழக அரசு ஆண்டுக்கான 10 சதவீத ஊதிய உயர்வும் தரவில்லை. தமிழகம் வேளாண் துறையில் முன்னோடியாக இருப்பதற்கு கிராமப்புறங்களில் பணியாற்றும் எங்களைப் போன்ற பணியாளர்களின் உழைப்பு தான் காரணம் என்பதை தமிழக அரசு உணரவேண்டும்.
சம்பளம் வழங்காத மாவட்டங்களில் உள்ள வேளாண் அதிகாரிகளை விரைவில் சம்பளம் வழங்க அறிவுறுத்துவதோடு 10 சதவீத ஊதிய உயர்வை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும் என்றனர்.