ADDED : ஜன 05, 2024 11:23 PM
சென்னை:அரசு ஊழியர்களுக்கு, 167 கோடி ரூபாய் செலவில் பொங்கல் போனஸ் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மக்கள் நலனுக்கு அரசு வகுக்கும் திட்டங்களுக்கு அச்சாணியாக அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, இவர்களுக்கு போனஸ் மற்றும் பரிசு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த பணியாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படும்.
தொகுப்பு ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2022 - 23ம் நிதியாண்டில், குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து மாத ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும்.
சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர், முன்னாள் கிராம அலுவலர், கிராம உதவியாளர்களுக்கும் 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
இதனால், அரசிற்கு 167 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.