ADDED : ஜன 14, 2025 12:49 AM
சென்னை: கோவில் பணியாளர் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணை கொடை திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
பின், அமைச்சர் அளித்த பேட்டி:
கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத்தொகை, 3,000; ஓய்வூதியம், 4,000; குடும்ப ஓய்வூதியம், 2,000; கிராமக்கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம், 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 2,516 ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கருணை கொடையாக, கடந்தாண்டு முதல் தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
தற்போது, கோவில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், 1,000 ரூபாய் பொங்கல் கருணை கொடை வழங்கப்படுகிறது.
சென்னை கோட்டூர்புரம், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, அப்பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது.
அதன் அருகில் மீதமுள்ள, 31 சென்ட் இடத்தில், 1994ம் ஆண்டில் இருந்து, 16 குடும்பங்கள் உள்ளன.
அந்த இடத்தின் முன்பகுதி மாநகராட்சிக்கும், பின்பகுதி கோவிலுக்கும் சொந்தமானது.
இரு துறைகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதுவரை ஆறு முறை, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு குடியிருப்பு, அண்ணா பல்கலை மாணவி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தந்தை தாமோதரன் பெயரில் உள்ளது.
அதில், கோவில் இடம், 325 சதுர அடி, மாநகராட்சி இடம் 328 சதுர அடி என, மொத்தம் 653 சதுரடி உள்ளது.
கோட்டூர்புரம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள, 16 குடியிருப்புகளையும், வாடகைதாரர்களாக ஏற்பதா அல்லது வெளியேற்றுவதா என்பது குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.