ADDED : ஜன 24, 2025 05:06 AM

சென்னை : தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது. இவை, ரேஷன் கடைகள் வாயிலாக இம்மாதம், 9ம் தேதி முதல், 13ம் தேதி வரை வழங்கப்பட்டன. அன்று வரை, பொங்கல் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கிய நிலையில், மற்றவர்கள் வாங்கவில்லை.
அவர்கள் நாளை வரை வாங்க அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, பொங்கல் தொகுப்பை இதுவரை வாங்காதவர்களை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு வாங்கி செல்லுமாறு, ரேஷன் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது: இந்தாண்டு பரிசு தொகுப்பில் ரொக்க பணம் இடம் பெறாததால், பலர் வாங்கவில்லை. வாங்காதவர் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட அதிகம் உள்ளது. எனவே, அதிகம் பேர் வாங்கியதாக பதிவு செய்ய, அனைத்து கார்டுதாரர்களுக்கும் தொகுப்பை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அவர்களின் அறிவுறுத்தலின்படி, வாங்காத கார்டுதாரர்களை தொடர்பு கொண்டு, பரிசு தொகுப்பை வாங்கி செல்லுமாறு கூறுகிறோம். ஒருசிலர் வந்து வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

