ADDED : ஜன 01, 2025 04:46 AM

சென்னை : தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்கும் பரிசு தொகுப்பில், முழு கரும்பு இடம் பெற்றுள்ளது. கரும்புக்கு மட்டும், 77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு கொள்முதலில் முறைகேடை தடுக்க, மாவட்ட அளவில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக கொள்முதல் செய்வதை கண்காணிக்க கண்காணிப்பு குழுவை நியமித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவில், வேளாண் இணை இயக்குனர், கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில், மண்டல கூடுதல் பதிவாளர், உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பு விலை, வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு உட்பட, 35 ரூபாயாக இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கரும்புக்கான விலையை, அந்தந்த விவசாயிகளுக்கு, அவர்களின் வங்கி கணக்கிற்கு, நேரடியாக செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கரும்பு கொள்முதல் பணி தொடர்பாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகளை நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், தரமான கரும்பை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என, கூட்டுறவுத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

