ADDED : ஜன 19, 2025 12:38 AM
சென்னை:'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி, வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது; விடுபட்ட கார்டுதாரர்கள் வாங்கலாம்' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துஉள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
சென்னை சின்னமலையில் உள்ள ரேஷன் கடையில் கடந்த, 9ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுதும், 34,793 ரேஷன் கடைகளில், பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடக்கிறது. இம்மாதம், 18ம் தேதி வரை, 1.87 கோடி கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 85 சதவீத பணி நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு வழங்க, வரும், 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விடுபட்ட கார்டுதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.