பொங்கல் பரிசு வினியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
பொங்கல் பரிசு வினியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஜன 08, 2026 02:54 PM
ADDED : ஜன 08, 2026 02:07 AM

சென்னை: தமிழகம் முழுதும், ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம், இன்று முதல் துவங்குகிறது. 'எங்கள் முன்னிலையில் தான், பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்' என, ஆளுங்கட்சியினர் ரேஷன் ஊழியர்களை மிரட்டியதுடன், கடைகளுக்கு முன் பேனர் வைத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 3,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து, இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளன. இதற்காக கடைகளுக்கு, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை அனுப்பப்பட்டு உள்ளன.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க, ஒரே சமயத்தில் கூட்டமாக வரக் கூடாது என்பதற்காக, எந்த தேதியில், எந்த நேரம் கடைக்கு வந்து வாங்க வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கனை' கார்டுதாரர்களின் வீடுகளில், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல், ரேஷன் ஊழியர்கள் வழங்கி வந்தனர்.
சென்னை, நந்தம்பாக்கம் பட் ரோடு அருகில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை, முதல்வர் ஸ்டாலின், இன்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: பல ரேஷன் கடைகளில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களாக உள்ள கட்சி நிர்வாகிகள் வந்து, 'நாங்கள் கடைக்கு வந்ததும், எங்கள் முன்னிலையில் தான், கார்டுதாரர்களிடம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும்; அதற்கு முன் வழங்கக் கூடாது; மீறினால் அவ்வளவு தான்' என, மிரட்டியுள்ளனர்.
மேலும், கடைகளுக்கு வெளியில், பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான விபரங்களுடன், கட்சி பேனர்களை வைத்து விட்டு சென்றுள்ளனர். அரசு தரப்பிலும், 'வெல்வோம் ஒன்றாக' என்ற பெயரில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் குறுக்கீடு இல்லாமல், பொங்கல் பரிசு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

