பொங்கல் பரிசுத்தொகை ரூ.2,000 வழங்க வேண்டும்: ஐகோர்ட்டில் பா.ஜ., வழக்கு
பொங்கல் பரிசுத்தொகை ரூ.2,000 வழங்க வேண்டும்: ஐகோர்ட்டில் பா.ஜ., வழக்கு
ADDED : ஜன 10, 2025 12:51 PM

சென்னை: பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 பரிசுத்தொகையை வழங்க உத்தரவிடக்கோரி பா.ஜ., தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை கொண்டாடுவதற்காக, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்தப் பரிசு தொகுப்போடு, ரூ.1,000 ரொக்கம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பில் ரூ.1,000 வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் சட்டசபை வரையில் குரல் எழுப்பியுள்ளனர்.
ஆனால், நிதிநிலைமை காரணம் காட்டி, இந்த ஆண்டு வழங்கப்படவில்லை என்று அமைச்சர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகை ரூ.2,000 வழங்கக்கோரி பா.ஜ., வக்கீல் மோகன்தாஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், பட்டியலிடப்பட்டு, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

