கோவில் யானைகள் பராமரிப்பு சரியில்லை அறநிலையத்துறை மீது பொன்முடி புகார்
கோவில் யானைகள் பராமரிப்பு சரியில்லை அறநிலையத்துறை மீது பொன்முடி புகார்
ADDED : நவ 22, 2024 01:50 AM
சென்னை:''திருச்செந்துார் கோவில் யானை தெய்வானை, வனத்துறை அனுமதி இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்படாததால் தான், அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன,'' என, வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மாமல்லபுரம் - புதுச்சேரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இதனால், சாலை விரிவாக்க பணி முழுமை பெறாமல், பலரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
வனத்துறை நிலங்களில் சாலைப்பணி மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
வனத்துறையை பொறுத்தவரை, வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடலோரப் பகுதிகளை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருச்செந்துார் கோவிலில் தெய்வானை யானை, வனத்துறை அனுமதி இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த யானை, அசாம் மாநிலத்தில் இருந்து வந்துஉள்ளது.
எதுவாக இருந்தாலும் யானையை பாதுகாக்கும் பொறுப்பு வனத்துறைக்கு உள்ளது. அதற்கு மறுவாழ்வு முகாம் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை.
கால்நடை மருத்துவர்கள் அந்த யானையை பரிசோதனை செய்துள்ளனர். மருத்துவர்கள் கொடுக்கும் அறிக்கையை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வனத்துறை அனுமதி பெற்று பல கோவில்களில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. சில கோவில்களில் அனுமதி பெறாமல் பராமரிக்கப்படுகின்றன.
அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம், யானைகளை சரியாக பராமரிக்காததால், திருச்செந்துாரில் யானை தாக்கி பாகன் உட்பட இருவர் கொல்லப்பட்டது போன்ற சோக சம்பவங்கள் நடக்கின்றன.
அனுமதி பெறாமல் எவ்வளவு யானைகள் கோவில்களில் உள்ளன என்ற எண்ணிக்கை எங்களுக்கு தெரியாது. அனுமதி பெற்று யானைகளை பராமரிப்பது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறையிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
வனப்பகுதிகளில் மலையேற்றம் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து, நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
மதுரை, மேலுார் அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அங்கு, 250 வகை பறவைகள் உள்ளன. வெள்ளை வல்லுாறு, ராஜாளி பறவைகளும், பல புதிய பறவை இனங்களும் அங்கு வசிக்கின்றன.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அரிட்டாபட்டி வனப்பகுதி, உயிர் பன்முகத் தன்மை கொண்ட நிலமாக, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அங்கு சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது. ஆலை அமைக்க அனுமதி கேட்டு, வனத்துறையிடம் விண்ணப்பிக்கும்போது, உரிய காரணங்களை கூறி நிராகரிப்போம்.
இவ்வாறு பொன்முடி கூறினார்.