'பொன்முடியும் வழக்கறிஞர் தான்; ஆனால் கோர்ட் பக்கமே போகாதவர்' * அமைச்சர் துரைமுருகன் கிண்டல்
'பொன்முடியும் வழக்கறிஞர் தான்; ஆனால் கோர்ட் பக்கமே போகாதவர்' * அமைச்சர் துரைமுருகன் கிண்டல்
ADDED : ஜன 18, 2025 07:51 PM
சென்னை:''அமைச்சர் பொன்முடியும் வழக்கறிஞர் தான்; ஆனால், நீதிமன்றத்திற்கு போகாதவர்; அவர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே போவார்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
தி.மு.க., சட்டத் துறையின் மூன்றாவது மாநில மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. கீழ்பாக்கத்தில் உள்ள, ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடந்த மாநாட்டை, அக்கட்சியின் பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் துவக்கி வைத்தார். அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துரைமுருகன் பேசியதாவது:
தி.மு.க.,வுக்கு வரக்கூடிய ஆபத்துக்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள, நமது சட்டத் துறை வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களை மீறி, எவராலும் கட்சி மீது கை வைக்க முடியாது.
அமைச்சர் பொன்முடியும் ஒரு வழக்கறிஞர் தான், ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு போகாதவர். அவருடைய வழக்கு விசாரணைக்கு மட்டுமே அங்கு செல்வார். அதேப்போல், அமைச்சர் ரகுபதியும் அதிகமாக கோர்ட்டுக்கு போகாதவர். இந்த விஷயத்தில் அவர்களை காட்டிலும் நான் 'ஜீரோ'.
முன்பெல்லாம், சிலர் மட்டுமே வழக்கறிஞர் துறையை தேர்வுச் செய்தனர். அப்போது, தி.மு.க.,வுக்கு இருந்த, ஒரே வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன். அவர் நீதிபதியான பின், சண்முகசுந்தரம் தான் கட்சி சார்ந்த அனைத்து வழக்குகளையும் எடுத்து நடத்தினார். அதனாலே அவர், அ.தி.மு.க., ஆட்சியில் வெட்டிக் கொல்லப்பட்டார். அவருக்குப் பின், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தி.மு.க.,வுக்காக பாடுபட்டவர் சண்முகசுந்தரம். தி.மு.க.,வுக்காக அவர் பெரும் தியாகம் செய்திருக்கிறார்.
நாட்டிலேயே நமது சட்ட அமைச்சர் தான், ஆண்மையுடன் குற்றங்களை எதிர்த்துக் கேட்கக்கூடிய வல்லமை பெற்றவர். இந்திய அரசியல் சட்டத்தை, மோடி அரசு படாதபாடு படுத்துகிறது. இன்றைக்கு மதச்சார்பின்மையை, ஒரு ஜனாதிபதி உச்சரிக்க மறுக்கிறார் என்றால், இந்த நாடு எங்கே செல்கிறது?
தி.மு.க.,வுக்கு மத்திய அரசிடம் நம்பிக்கை உண்டா என்றால் இருக்கிறது. அது பலமாக இருக்க வேண்டும். ஆனால், எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசு தன்னகத்தே குவித்து வைத்துக் கொண்டு மாநில அரசுகளை தன்னுடைய கைப்பாவையாக வைத்திருக்கைப் பார்க்கிறது. அப்படி ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.