பொன்முடி பதவி இழப்பு: தி.மு.க.,வில் பீர் விருந்து
பொன்முடி பதவி இழப்பு: தி.மு.க.,வில் பீர் விருந்து
UPDATED : ஏப் 29, 2025 05:27 AM
ADDED : ஏப் 29, 2025 02:10 AM

திருக்கோவிலுாரில் தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் மது பாட்டிலுடன் நடந்த தடபுடல் விருந்தால், அக்கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனாலும், நிகழ்ச்சி பொன்முடி பதவி பறிப்புக்கான கொண்டாட்டம் என தகவல் பரவி உள்ளது.
![]()  | 
மீன் வறுவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலுார் வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு கூட்டம் துவங்கிய நிலையில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஓட்டுச்சாவடியில் இளைஞர் அணி அமைப்பாளர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.
கூட்டம் நிறைவடைந்த நிலையில், அசைவ விருந்து பரிமாறப்பட்டது. தலைவாழை இலை போடப்பட்டு, பரோட்டா, இட்லி, தோசை, மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, மீன் வறுவல் என இலை நிரம்பி வழிய, பக்கத்தில் ஒரு வாட்டர் பாட்டிலும், கூடவே கூலிங்கான பீர் பாட்டிலும் வைக்கப்பட்டது. விருந்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று குதுாகலித்தனர்.
'போதை ஒழியட்டும்; பாதை ஒளிரட்டும்' போதைப்பொருள் உங்கள் உடல் நலனை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் நலனையும், நாட்டின் நலனையும் சேர்த்தே கெடுக்கும்' என்ற முதல்வரின் விளம்பர வாக்கியத்தை காற்றில் பறக்கவிட்டு, கட்சியினர் மது விருந்தில் திளைத்தது, கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிர் அணியை சேர்ந்தவர்.
பொன்முடி அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டாடும் வகையிலேயே, எதிர் அணியைச் சேர்ந்தோர் மது பாட்டிலுடன் விருந்து நடத்தியுள்ளனர் என, இந்த விருந்து நிகழ்ச்சி குறித்து பொன்முடி ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
![]()  | 
கொண்டாட்டம்
இதுகுறித்து, விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் கூறியதாவது: கட்சியினரை உற்சாகப்படுத்த, விருந்தும் மது பாட்டிலும் வைக்கப்பட்டது. இன்றைய சூழலில், மதுவுடன் விருந்து நிகழ்ச்சி நடப்பது அபூர்வமானது அல்ல.
கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில் பொன்முடிக்கு ஆதரவான ஒரு அணியும், எதிர்ப்பாக ஒரு அணியும் செயல்படுகிறது. கட்சி வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சியை, பொன்முடி பதவி பறிப்பை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டது என பொன்முடி ஆதரவாளர்கள் நினைக்கின்றனர்.
அதனால், விருந்தில் மது பாட்டில் வைக்கப்பட்ட தகவலைக் கேள்விப் பட்டு, அதை அவர்கள் பெரிதுபடுத்தி, சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். அதற்காகவே, விருந்து நிகழ்ச்சி தொடர்பான வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -



