செம்மண் கொள்ளை விவகாரம் பொன்முடியிடம் மீண்டும் விசாரணை
செம்மண் கொள்ளை விவகாரம் பொன்முடியிடம் மீண்டும் விசாரணை
ADDED : டிச 18, 2024 12:59 AM

சென்னை:செம்மண் அள்ளிய விவகாரத்தில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது தொடர்பாக, வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. 2006 - 2011ல், கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மகன் கவுதமசிகாமணி, பினாமிகள் மற்றும் உறவினர்களுக்கு, 'டெண்டர்' ஒதுக்கீடு செய்து, விழுப்புரம் மாவட்டம் வானுார் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ள அனுமதி அளித்துள்ளார்.
இதன் காரணமாக, பூத்துறை குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, 2.46 லட்சம் லோடு செம்மண் எடுத்து, அரசுக்கு, 28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த, 2023 ஜூலையில், சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள, பொன்முடி, கவுதம சிகாமணி வீடு, அலுவலகங்கள் என, ஒன்பது இடங்களில் சோதனை நடத்தினர்.
கணக்கில் வராத, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 81 லட்சம் ரூபாய் ரொக்கம், வங்கி கணக்கிலிருந்து, 41 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பொன்முடி மற்றும் அவரின் உறவினர்களின், 14.21 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் முடக்கினர்.
இச்சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, பொன்முடியை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். பின், மூன்று முறை சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டார்.
தற்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை, 11:00 மணியளவில், பொன்முடி ஆஜரானார்.
அவரிடம் சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டு, எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது.