முதுநிலை மருத்துவப் படிப்பு: ஆன்லைனில் மட்டுமே கவுன்சிலிங்
முதுநிலை மருத்துவப் படிப்பு: ஆன்லைனில் மட்டுமே கவுன்சிலிங்
UPDATED : ஜன 08, 2024 07:19 AM
ADDED : ஜன 08, 2024 04:32 AM

புதுடில்லி : முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே நடத்தப்படும். கல்லுாரிகள் தாங்களாக மாணவர்களை சேர்க்க முடியாது என, தேசிய மருத்துவ கமிஷனின் புதிய கட்டுப்பாடுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவக் கல்வி தொடர்பான நடைமுறைகளை, தேசிய மருத்துவ கமிஷன் வகுத்து வருகிறது. முதுநிலை மருத்துவக் கல்வி கட்டுப்பாடுகள் தொடர்பாக புதிய நெறிமுறைகளை கமிஷன் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடக்கும். கவுன்சிலிங்குக்கு முன்பாகவே, அந்தப் படிப்புக்காக கல்வி கட்டண விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
எந்தக் கல்லுாரியும் தானாக, மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. மத்திய அல்லது மாநில கவுன்சிலிங் ஆணையம் மட்டுமே கவுன்சிலிங்கை நடத்தும்.
நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு பொதுவான கவுன்சலிங் நடத்தப்படும். தேர்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தகுதிப்பட்டியலின்படி இது நடத்தப்படும்.
தகுதித் தேர்வை, சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில், தேர்வு முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதன்படி, பல விடைகளில் இருந்து சரியான ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பும் தரப்படும். அதுபோல், மருத்துவப் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான நடைமுறையிலும் மாற்றம் செய்யப்படுகிறது.
இதுவரை, மாவட்ட மருத்துவமனைகளுக்கான வரையறை, 100 படுக்கை வசதி கொண்டவை என்பதாக இருந்தது. இது, 50 படுக்கை வசதியாக குறைக்கப்படுகிறது. இதன் வாயிலாக பயிற்சி அளிக்கக் கூடிய மாவட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
முதுநிலை பட்டப் படிப்பு துவங்க கல்லுாரிக்கு அனுமதி அளிக்கும்போதே, அதற்கான அங்கீகாரமும் வழங்கப்படும். இதனால், படிப்பை முடித்த பின், பதிவு செய்வதில் மாணவர்களுக்கு இருந்த சிக்கல் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.