தபால் ஓட்டுகள் ஒருங்கிணைப்பு மையம் ஓட்டுகள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்
தபால் ஓட்டுகள் ஒருங்கிணைப்பு மையம் ஓட்டுகள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்
ADDED : ஏப் 18, 2024 12:44 AM

திருச்சி:தமிழகம் முழுதும் உள்ள 39 தொகுதிகளுக்கான தபால் ஓட்டுகளை, அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி, நேற்று, திருச்சியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் துவங்கியது.
தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் தபால் ஓட்டுகளை, ஒரே இடத்திற்கு கொண்டு வந்து, தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் வகையில், திருச்சியில், தபால் ஓட்டுகள் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 4 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வழக்கமாக, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான தபால் ஓட்டுகள், அவர்களுக்கான பயிற்சி மையங்களில் பெறப்படும். தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 8:00 மணி வரை பெறப்படும், தபாலில் அனுப்பப்படும் ஓட்டுகள் பெறப்படும்.
அந்த தபால் ஓட்டுகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, அவர் நியமிக்கும் அலுவலர் வாயிலாக, சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும்.
அங்கு, ஒவ்வொரு தொகுதிக்குமான தபால் ஓட்டுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அந்த அலுவலர் வாயிலாகவே, சம்பந்தப்பட்ட தொகுதிக்கு கொடுத்து அனுப்பப்படும்.
இப்பணியில், ஏராளமான அலுவலர்களை ஈடுபடுத்த வேண்டி இருப்பதாலும், கால விரயம் ஏற்படுவதாலும், இந்த தேர்தலில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில், புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரையின்படி, தபால் ஓட்டுகளை ஒருங்கிணைத்து, அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் புதிய நடைமுறையை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம், திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9:00 மணி முதல், தமிழகம் முழுதும் இருந்து கொண்டு வரப்பட்ட தபால் ஓட்டுகளை பிரித்து, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரான திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

