ருத்ர வன்னிய மகாராஜன் படத்துடன் 'போஸ்டர்' * ராமதாஸ் உத்தரவு
ருத்ர வன்னிய மகாராஜன் படத்துடன் 'போஸ்டர்' * ராமதாஸ் உத்தரவு
ADDED : பிப் 04, 2025 07:03 PM
சென்னை:கும்பகோணத்தில் நடக்கவுள்ள வன்னிய சங்க மாநாட்டுக்கு, யாகத்திலிருந்து வெளிவரும் ருத்ர வன்னிய மகாராஜன் படத்துடன், 'போஸ்டர்' அச்சிட்டு ஒட்டுமாறு, பா.ம.க.,வினருக்கு, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 23ம் தேதி கும்பகோணத்தில், வன்னியர் சங்கம் சார்பில், சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடக்கவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின், வன்னியர் சங்க மாநாடு நடத்தி, தங்கள் பலத்தை காட்ட, பா.ம.க., தயாராகி வருகிறது.
இது தொடர்பாக , ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கும்பகோணம் மாநாட்டில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மக்கள் பங்கேற்பதற்கு வசதியாகவும், மாநாடு குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்காகவும், சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இப்பணிகளில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலர்கள் ஈடுபட வேண்டும்.
மாநாட்டுக்காக அச்சிடப்படும் போஸ்டர்களில், 'யாகத்திலிருந்து உயிர் பெற்று வரும் ருத்ர வன்னிய மகாராஜன்' படம் இடம்பெற வேண்டும். மாநாட்டுக்கு இன்னும், 19 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், போஸ்டர் அச்சிட்டு ஒட்டும் பணியை, மாவட்ட செயலர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.