சத்துணவு ஊழியர் நியமனத்தில் விதிமீறல் பணி நியமனத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவு
சத்துணவு ஊழியர் நியமனத்தில் விதிமீறல் பணி நியமனத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 02, 2012 01:25 AM
அன்னூர்:சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில், விதிமுறை மீறல் என, எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க.,வினர் புகார் செய்தனர். இதையடுத்து, சத்துணவு அமைப்பாளர்கள் மூன்று பேரின் பணி நியமனத்தை, கலெக்டர் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில், சத்துணவு துறையில், ஒன்பது அமைப்பாளர், 17 சமையலர், ஏழு உதவியாளர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.கடந்த மாதம், 22 முதல், 25 வரை, அன்னூரில், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில், இதுவரை இல்லாதபடி, முறைகேடு இல்லாமல் ஊழியர்களை தேர்வு செய்ய, தகுதியின் அடிப்படையில், மதிப்பெண் போடப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.காலியாக இருந்த ஒன்பது அமைப்பாளர் பணியிடங்களில், ஏழு இடங்களுக்கும், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கும், ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். 28ம் தேதி முதல், சம்பந்தப்பட்ட சத்துணவு மையங்களில் பணிபுரிந்தனர். இந்நிலையில், 'பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து, 3 கி.மீ., தொலைவிற்கு மேல் வசிப்பவர்கள்; அவர்கள் மோசடியாக சான்று பெற்று, பணி நியமனம் பெற்று விட்டனர்' என, அவிநாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி சார்பில், முதல்வரின் தனிப்பிரிவு, கோவை கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் செய்யப்பட்டது.புகார் குறித்து விசாரிக்கும்படி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.வருவாய் கோட்ட அலுவலர் அந்தஸ்துள்ள அதிகாரி தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள், ஒன்றிய அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்காமல், பணி நியமனம் பெற்ற, சத்துணவு அமைப்பாளர்களின் வசிப்பிடம் குறித்து, நேரடியாக ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கையை, கலெக்டர் கருணாகரனிடம், நேற்று முன்தினம் சமர்ப்பித்தனர்.அறிக்கையின் அடிப்படையில், மூன்று பேரின் பணி நியமனத்தை, ரத்து செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.மூன்று பேரும், நேற்று மதியம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, வரவழைக்கப்பட்டனர். பி.டி.ஓ., பூபதி அவர்களிடம், பணி நியமன ரத்து உத்தரவை வழங்கினார்.
