ரூ.7,000 கோடி கடன் வாங்க உதவும் மின் வாரிய நிதிநிலை அறிக்கை
ரூ.7,000 கோடி கடன் வாங்க உதவும் மின் வாரிய நிதிநிலை அறிக்கை
ADDED : பிப் 10, 2024 12:13 AM
சென்னை:இந்திய கணக்கு தரநிலை விதிகளின்படி, குறித்த காலத்திற்குள் நிதி நிலை அறிக்கையை தயாரித்து, மின் வாரியம், மக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. இதனால், தமிழக அரசு கூடுதலாக, 7,050 கோடி ரூபாய் கடன் வாங்க முடியும்.
தமிழக மின் வாரியத்திற்கு வரவை விட, செலவு அதிகம் இருப்பதால் இழப்பு ஏற்படுகிறது. இதனால், நிதிநிலை அறிக்கையை ஆண்டுதோறும் குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை.
மத்திய அரசு, மின்சார வினியோக இழப்பை பூஜ்ஜியமாக குறைக்க, மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை, 2021ல் அறிவித்தது. அத்திட்ட பணிகளை, தமிழகத்தில், 8,929 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஐந்து ஆண்டுக்குள் பணிகளை முடித்து விட்டால், 60 சதவீத நிதியை திரும்ப செலுத்த தேவையில்லை. இல்லையெனில், மொத்த கடனையும், வட்டியுடன் செலுத்த வேண்டும்.
மறுசீரமைப்பு திட்டத்தின் மற்றொரு அம்சமாக, மாநில மின் வாரியங்கள், நிதிநிலை அறிக்கையை, நிதியாண்டு முடிவடைந்த ஆறு மாதம் அல்லது ஒன்பது மாதங்களுக்குள் தயாரித்து, இந்திய தணிக்கை துறையிடம் சமர்ப்பித்து, ஒப்புதல் பெற வேண்டும்.
அப்படி செய்தால், மாநில அரசுகள், தங்கள் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.5 சதவீத கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி நிறுவன சட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்கள், இந்திய கணக்கு தரநிலை விதிப்படி, நிதிநிலை அறிக்கை தயாரிக்க வேண்டும். மின் வாரியம், மத்திய மின் சட்ட விதிப்படி நிதிநிலை அறிக்கை தயாரித்தது.
நிறுவன சட்டத்தின் கீழ் தயாரிக்கும் நிதிநிலை அறிக்கையில், வரவு செலவு தொடர்பாக, அனைத்து விபரங்களும் விரிவாக இருக்கும். அதை பார்த்து தான், தர மதிப்பீட்டு நிறுவனங்கள் தரவரிசை வழங்குகின்றன. இதனால், கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் வாரியம், 2022 - 23 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, இந்திய கணக்கு தரநிலை விதிப்படி, 2023 டிசம்பருக்குள் தயாரித்து சமர்ப்பித்து விட்டது.
இது தவிர, அந்த ஆண்டிலேயே, 2020 - 21; 2021 - 22க்கு, மின் சட்டப்படி தயாரித்த நிதிநிலை அறிக்கைகளை மீண்டும் மாற்றி, இந்திய கணக்கு தரநிலை விதிகளின் படி தயாரித்துள்ளது.
இதனால், மத்திய மின் துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய நிதித் துறை அறிவித்தபடி, தமிழக அரசு கூடுதல் கடன் பெற முடியும்.
அதன்படி, தமிழக அரசு, 7,054 கோடி கடன் பெற முடியும். கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.