ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்தி கடும் பாதிப்பு
ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்தி கடும் பாதிப்பு
UPDATED : நவ 04, 2026 06:52 PM
ADDED : நவ 04, 2026 01:37 PM
பள்ளிப்பாளையம்: காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் அளவு குறைந்ததால், ஓடப்பள்ளி தடுப்பணையில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியில், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்வதற்காக, 490 கோடி ரூபாய் மதிப்பில், ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, 2011 நவம்பர் முதல், மின் உற்பத்தி துவக்கப்பட்டது.
தடுப்பணை பகுதியில் 2 யூனிட் அமைத்து, காவிரி ஆற்றில், 9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, ராட்சத ஜெனரேட்டர் மூலம், தலா, 15 வீதம், 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை, ஓடப்பள்ளி தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெறும். ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில் ஏற்றம், இறக்கத்துடன் மின் உற்பத்தி நடக்கும். இந்நிலையில் கடந்த செப்., 1ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
தொடர்ந்து தடுப்பணையில், போதிய அளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மின் உற்பத்தி நடந்தது. தற்போது, மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீர் அளவு குறைந்ததால், ஆற்றில் நீர் வரத்தும் குறைந்தது. தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை உருவாகி, ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
