சுருளியாறு நீர் மின் நிலையத்தில் ஜன.19 முதல் மின் உற்பத்தி
சுருளியாறு நீர் மின் நிலையத்தில் ஜன.19 முதல் மின் உற்பத்தி
ADDED : ஜன 16, 2024 01:12 AM
கம்பம் : சுருளியாறு மின்நிலையத்தில் மின் உற்பத்தி வரும் ஜன.,19ல் துவக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. பழுதை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
தேனி மாவட்டம் சுருளி அருவி அருகில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வண்ணாத்திபாறை என்ற இடத்தில் சுருளியாறு மின்நிலையம் அமைந்துள்ளது. 1978 ல் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., இம்மின்நிலையத்தை திறந்து வைத்தார். இங்கு நிறுவப்பட்டுள்ள ஜெனரேட்டர் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
இங்கு 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தினமும் மாலை நேரங்களில் மின் உற்பத்தி செய்யப்படும். காலை, மாலை என 'பீக் ஹவர்சில்' ஏற்படும் கூடுதல் தேவையை சமாளிக்க, இந்த மின் உற்பத்தி பயன்பட்டது.
2021 ல் இந்நிலையத்திற்கு இரவங்கலாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் பிரதான குழாய் 220 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்தது. அக்குழாயை மாற்றி புதுக் குழாயை பொருத்தும் பணி மற்றும் பெயிண்டிங் பணிகள் ரூ.10 கோடியில் சமீபத்தில் முடிவடைந்தது. மின் உற்பத்தியை துவங்கிய போது, ஜெனரேட்டர், இயந்திரங்களில் பழுது ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மின் உற்பத்தி மீண்டும் நிறுத்தப்பட்டு இயந்திரங்களில் உள்ள பழுதை நீக்க குறுகிய கால டெண்டர் விடப்பட்டது.
டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனம் ஜெனரேட்டரில் இருந்த நாசில்களை கழற்றி கோவைக்கு கொண்டு சென்று, அங்கு நாசில்களை 'ரீ கண்டிசனிங்' செய்து தற்போது, சுருளியாறு மின்நிலையத்தில் பொருத்தும் பணிகளை செய்து வருகிறது.
பணிகள் நிறைவடையும் நிலை உள்ளதால் ஜன.,19ல் மின் உற்பத்தியை துவக்க திட்டமிட்டுள்ளதாக மின்வாரியத்தினர் கூறினர்.