ADDED : மார் 03, 2024 02:54 AM
சென்னை : சென்னையை அடுத்த அத்திப்பட்டில், வடசென்னை - 3 என்ற பெயரில், 800 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதன் கட்டுமான பணி, 2016ல் துவங்கியது. மொத்த திட்ட செலவு, 6,376 கோடி ரூபாய்.
அங்கு, 2019 - 20ல் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. ஒப்பந்த நிறுவனங்கள் கட்டுமான பணிகளில் அலட்சியம் காட்டியதால், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியவில்லை.
நீண்ட இழுபறிக்கு பின், ஜன., 14ம் தேதி அதிகாலை, 1:39 மணிக்கு, வடசென்னை - 3 மின் நிலையத்தில், சோதனை ரீதியாக மின் உற்பத்தி துவங்கியது. அங்கு, 111 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
பின், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பல்வேறு கட்ட சோதனை செய்யப்பட்டு வந்தன. தற்போது, கோடை வெயில் கடுமையாக உள்ளது. இதனால், மின் தேவை கூடியுள்ளது.
எனவே, வட சென்னை - 3 மின் நிலையத்தில், அடுத்த வாரம் அதாவது, வரும் 10க்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தியை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு கூடுதலாக, 800 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்.

