ADDED : ஜன 30, 2024 12:30 AM
சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் மத்திய அரசின் கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளது.
அங்கு தலா, 1,000 மெகாவாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.அதில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 1,000 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சாரம், தமிழக மின்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக நேற்று அதிகாலை 5:30 மணி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஏப்., 15ம் தேதி முதல் மீண்டும் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில், கோடைக் காலம் துவங்க உள்ளது.
இந்த சூழலில், கூடங்குளம் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கியதில், 50 சதவீத மின்சாரம் கிடைக்காது என்பதால், மின்தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியத்திற்கு சிரமம் ஏற்படும்.