ADDED : ஜூன் 26, 2025 10:33 PM
சென்னை:நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை சந்தை நிலவரப்படி நிர்ணயிக்க, மாநில அளவிலான மையக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அரசாணை:
நிலங்களின் வழிகாட்டி மதிப்பு குறித்த பரிந்துரைகளை, கலெக்டர் தலைமையிலான மாவட்ட வழிகாட்டி மதிப்பு நிர்ணயக் குழுக்கள், மாநில அளவிலான மையக் குழுவுக்கு அனுப்பும். அவற்றை ஆய்வுசெய்து, நிலங்களின் வழிகாட்டி மதிப்பை மாநில குழு இறுதி செய்யும்.
இந்த நடைமுறையின்படி குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை, வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இனி, சந்தை நிலவரப்படி நிலங்களின் வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க, மாநில அளவிலான மையக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வழங்கப்படும் வசதிகள், பஸ், ரயில் நிலையம், மார்க்கெட் என அமைந்துள்ள இடத்தின் முக்கியத்துவம், அடுக்குமாடி அமைந்துள்ள சாலையின் அகலம், கட்டுமானத்தின் தரம், இதர சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், வரிசை வீடுகளுக்கான கூட்டு மதிப்பை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

