பிரதமர் சூரியசக்தி மின் திட்டம் நெட்ஒர்க் கட்டணம் ரத்து?
பிரதமர் சூரியசக்தி மின் திட்டம் நெட்ஒர்க் கட்டணம் ரத்து?
ADDED : மார் 06, 2024 11:49 PM
சென்னை:பிரதமர் நரேந்திர மோடி, சூரிய வீடு இலவச மின் திட்டத்தை சமீபத்தில் துவக்கி வைத்தார். அத்திட்டத்தின் கீழ், 1 கிலோ வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாய்; 2 கி.வாட்டிற்கு, 60,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் அமைத்தால், 78,000 ரூபாய் மானியம் கிடைக்கும்.
பிரதமர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 25 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கு, பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். மின் நிலையம் அமைக்கும் நுகர்வோரிடம், நெட் ஒர்க் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:
பிரதமர் திட்டத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும், நெட்ஒர்க் சார்ஜ் கட்டணமாக, இரு மாதங்களுக்கு ஒருமுறை, 71 ரூபாயை மின்வாரியம் வசூலிக்க உள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் வசூலிப்பது, நுகர்வோருக்கு சுமையை ஏற்படுத்தும்.
எனவே, பிரதமர் திட்டத்தில் அமைக்கும் சூரியசக்தி மின் நிலையத்திற்கு, நெட்ஒர்க் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய மின் வாரியத்திற்கு உத்தரவிடுமாறு, மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

