ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் சந்திப்பு: த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணி மலர வாய்ப்பு
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் சந்திப்பு: த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணி மலர வாய்ப்பு
UPDATED : பிப் 14, 2026 01:20 AM
ADDED : பிப் 14, 2026 01:19 AM

'ஆட்சியில் பங்கு இல்லை' என முதல்வர் ஸ்டாலின் கூறியதால், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தும் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி., ஆகியோர் நேற்று முன்தினம் டில்லியில் ராகுலை சந்தித்து பேசினர்.
த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகள், இரண்டாம் இடத்தை கைப்பற்றும் தொகுதிகள் சர்வே விபரத்தை, ராகுலிடம் பிரவீன் சக்கரவர்த்தி ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து, டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பொது மேடை ஒன்றில், 'ஆட்சியில் பங்கு தர முடியாது' என பகிரங்கமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை, ராகுல் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை முதல்வர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக கருதுகிறார்.
ஏற்கனவே, காங்கிரசுக்கு சாதகமாக உள்ள 125 தொகுதிகளின் பட்டியலை, 'வார் ரூம்' நிர்வாகிகள் தயாரித்து வைத்திருந்தனர். அதிலிருந்து 70 தொகுதிகளை தேர்வு செய்து தரும்படி, வார் ரூம் நிர்வாகிகளுக்கு, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்தொகுதிகளின் பட்டியலை த.வெ.க.,விடம் வழங்கி, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தும் பொறுப்பு, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
வரும் 17ம் தேதி சென்னைக்கு வேணுகோபால் வருகிறார்; தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றத்தை கண்டித்து, காங்கிரஸ் நடத்தும் பேரணியில் பங்கேற்கிறார். அப்போது, த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து, கூட்டணி குறித்து பேச்சு நடத்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

