இறைவனிடம் பிரார்த்திப்பதே அனைத்திலும் சக்தி வாய்ந்தது: சிருங்கேரி ஜகத்குரு உபதேசம்
இறைவனிடம் பிரார்த்திப்பதே அனைத்திலும் சக்தி வாய்ந்தது: சிருங்கேரி ஜகத்குரு உபதேசம்
ADDED : டிச 02, 2025 05:04 AM

டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், குரு வந்தன நிகழ்ச்சியில், 'விஜய யாத்திரை - 2025'ன் நிறைவு அருளாசி வழங்கினார்.
அதில், சொத்துக்களும், சாதனைகளும் இறைவனின் அருளுக்கு முன் எவ்வாறு பின்னடைவு பெறுகிறது என்ற உண்மையை உணர்த்தும் கதையை ஜகத்குரு விவரித்தார்.
அவரது அருளுரை:
ஒரு மனிதனின் கையில் உள்ள ஐந்து விரல்களும் தங்களுக்குள் சண்டையிட துவங்கின. தங்களுக்குள் யார் மற்றவர்களை விட மேலானவர் என்று அறிய விரும்பின.
அதற்காக, பிரம்மாவை அணுகினர். வீண் சர்ச்சையைத் தவிர்க்க விரும்பிய பிரம்மா, நேரடியாக ஒரு தீர்ப்பை வழங்கவில்லை. அதற்கு பதிலாக, இறுதியாக முடிவெடுப்பதற்காக ஒவ்வொரு விரலிடமிருந்தும் கருத்து கேட்டார்.
கருத்து சொன்ன விரல்கள் கட்டை விரல், 'நான் சக்தியை குறிக்கிறேன். நான் இல்லாமல், கைக்கு அதிகப் பயனே இருக்காது. நானே மேலானவன்' என்றது. ஆள்காட்டி விரல், 'நான் அதிகாரத்தைக் குறிக்கிறேன். என் விரல் உயர்த்தப்படும்போது, அது அதிகாரத்தின் வெளிப்பாடு என்பதை உலகம் அங்கீகரிக்கிறது. எனவே, நானே மேலானவன்' என்றது.
நடுவிரல், 'நான் உயர்ந்த நிலையை குறிக்கிறேன். அரசனைப் போல நான் மையத்தில் அமர்ந்திருக்கிறேன். இருபுறமும் இரண்டு விரல்கள் என நான்கு விரல்களாலும் நான் திறமையாகத் தாங்கப்படுகிறேன்' என்றது.
மோதிர விரல், 'நான் செல்வத்தைக் குறிக்கிறேன். விலைமதிப்பற்ற உலோகங்களும், விலைமதிப்பற்ற கற்களும் என் மீது மட்டுமே அலங்கரிக்கப்படுகின்றன' என்றது.
சுண்டுவிரல் தாத்பர்யம் சுண்டு விரலோ, 'நான்கு விரல்கள் கூறியதைப் போல, எனக்கு எந்தவிதமான பவுதிக பலமும் இல்லை; சக்தியும் இல்லை. அதிகாரமும் இல்லை, ஸ்தானமும் இல்லை, செல்வமும் இல்லை. நான் இவை அனைத்திலிருந்தும் வெகு தொலைவில் இருக்கிறேன்.
'எந்த விரல் மேலானது என்ற இந்த விவாதத்தில் நான் ஈடுபடவில்லை. ஆனாலும், ஒரு நல்ல காரணத்துக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த உலகமே, பெருமைகளை துறந்துவிட்டு, இறைவனைப் பிரார்த்திக்கவும், இறைவனுடன் இணைய நாடி நிற்கும் போதும், கரம்கூப்பி வணங்கி நிற்கும் போதும், வணக்கத்திற்குரிய கரத்தின் முதலாவதாக இணைவது நான்தான்.
அந்த கைங்கரியத்தில் நானும் ஒருவனாக இருக்க எனக்கு அருளியதற்காக நன்றி' என்றது.
எ து உயர்வானது? எனவே, இறைவனிடம் செலுத்தும் பிரார்த்தனைகள், ஆன்மிக முயற்சிகளால் கிடைக்கும் அருளும், ஆசிகளும், உலகப் பற்றுதல் தரும் எந்தவொரு பவுதிக ஈடுபாட்டையும் விட சக்தி வாய்ந்தவை; மற்ற எல்லாவற்றையும் விட உயர்வானது.
இவ்வாறு, சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
- நமது நிருபர் -

