கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்: அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே விளக்கம்
கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்: அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே விளக்கம்
UPDATED : மே 10, 2024 05:04 PM
ADDED : மே 10, 2024 04:35 PM

சென்னை: ரயிலில் இருந்து கர்ப்பிணி நிலை தடுமாறி உயிரிழந்த விவகாரத்தில், ரயிலில் இருந்த அபாய சங்கிலியில் எந்த பிரச்னையும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த மேல நீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், தனது குடும்பத்துடன் சென்னை திரிசூலம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி(20). திருமணமாகி 9 மாதமாகும் நிலையில் கஸ்தூரி 7 மாத கர்ப்பமாக இருந்தார்.
சொந்த கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழா மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கடந்த 2ம் தேதி சென்னையில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்9 கோச்சில் கஸ்தூரி மற்றும் உறவினர்கள் 11 பேர் தென்காசிக்கு வந்த போது, ரயிலில் இருந்து நிலைதடுமாறி கஸ்தூரி கீழே விழுந்தார்.
போலீசார் தேடுதலில், உளுந்தூர்பேட்டை அடுத்த பூ.மாம்பாக்கம் அருகே கஸ்தூரியை இறந்த நிலையில் கண்டுபிடித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, ரயிலில் அபாய சங்கிலி சரியாக வேலை செய்யவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விசாரணை குறித்த அறிக்கையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ரயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயிலில் அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை. எஸ்9 பெட்டி உள்ளிட்ட ரயிலில் இருந்த 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கி உள்ளது. அபாய சங்கிலியை முறையான அழுத்தத்துடன் இழுத்து இருந்தால் ரயில் நின்று இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.