போதைப்பொருள் கடத்தல் 42,548 பேர் பட்டியல் தயாரிப்பு
போதைப்பொருள் கடத்தல் 42,548 பேர் பட்டியல் தயாரிப்பு
ADDED : ஜன 09, 2025 06:52 AM
சென்னை: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட, பழைய குற்றவாளிகள் 42,548 பேர் பட்டியலை தயாரித்துள்ள போலீசார், அவர்களில், 4,352 பேரை, தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்து போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 2019 முதல் 2024 வரை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆய்வு செய்து, பழைய குற்றவாளிகள் 42,548 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், அவர்கள் மீது உள்ள வழக்குகள், தண்டனை விபரம், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
பட்டியலில் இடம் பெற்றவர்களில், 18,716 பேர் கைது செய்யப்பட்டனர்; மற்றவர்களிடம் உறுதிமொழி பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றை மீறினால் கைது செய்யப்படுவீர் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கைதான நபர்களில், 14,175 பேர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். அவர்களில், ஜாமின் நிபந்தனைகளை மீறிய 114 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாமின் பெற்று வெளியே வந்தவர்களில் 4,352 பேர், தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம்.
அவர்கள் குறித்த விபரங்கள், மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு இருந்தால், உடனடியாக கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

