விபூதி, குங்குமம் முதல்வருக்கு அனுப்ப பூசாரிகள் தீர்மானம்
விபூதி, குங்குமம் முதல்வருக்கு அனுப்ப பூசாரிகள் தீர்மானம்
UPDATED : ஏப் 05, 2025 03:02 AM
ADDED : ஏப் 05, 2025 12:49 AM

பல்லடம்:''கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு, விபூதி மற்றும் குங்குமம் பிரசாதம் அனுப்பப்படும்,'' என்று கோவில் பூசாரிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் வாசு கூறியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட, 17 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.
கோரிக்கைகள் அனைத்தும் கானல் நீராகவே உள்ளன.
வரும், 15ம் தேதி நடைபெறவுள்ள அறநிலையத்துறை சார்ந்த சட்டசபை மானிய கோரிக்கையில், 17 அம்ச கோரிக்கைகளில், சில கோரிக்கைகளாவது நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறோம்.
இக்கோரிக்கைகளை நினைவுபடுத்தும் விதமாக, வரும் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு அன்று, தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, விபூதி, குங்குமம் பிரசாதங்களை, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, விபூதி, குங்குமம் பிரசாதங்களை முதல்வருக்கு அனுப்ப பூசாரிகள் தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

