UPDATED : மே 28, 2024 11:56 PM
ADDED : மே 28, 2024 11:53 PM

சென்னை: 'தமிழகத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பது பற்றி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள், 50 பேருக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
நாட்டில், குடிசைகளில் வாழும் ஏழைகளுக்கும், 'கான்கிரீட்' வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, 2015 ஜூன் 25ல், பிரதமரின் வீடு கட்டும் திட்டமான, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை அமல்படுத்தியது.
ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
நான்கு தவணைகள்
மாடி வீடு கட்டுவதற்கு மத்திய அரசு, 60 சதவீத பங்கு தொகையாக, 72,000 ரூபாயும், மாநில அரசு, 40 சதவீத பங்கு தொகையாக, 48,000 ரூபாயும் வழங்குகிறது.
கட்டடத்தின் மேல்தளத் திற்கான தொகையாக, 50,000 ரூபாய் என, 1.70 லட்சம் ரூபாய் மானியமாக தரப்படுகிறது. கட்டடம், 270 சதுர அடிக்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
சிமென்ட், கம்பி, கதவு, ஜன்னல் ஆகியவற்றின் தொகை போக, மீதி தொகை, பயனாளிகளுக்கு நான்கு தவணைகளில் தரப்படுகிறது.
பயனாளிகளின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை ஊராட்சி எழுத்தர் பெற்று, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் சரிபார்க்கப்பட வேண்டும். பின், பயனாளிகள் விபரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அதன்பின், ஒன்றிய பணி மேற்பார்வையாளர், பயனாளிகளின் இடத்தை கள ஆய்வு செய்து சரிபார்த்து, அதன் விபரங்களை தன் மொபைல் போன் வாயிலாக, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை செய்த பின், மாவட்ட திட்ட இயக்குனரால், 'இ - சாங்ஷன் ஆர்டர்' பிறப்பிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் வாயிலாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கு புத்தகம், அடையாள அட்டை ஆகியவற்றை, மண்டல துணை வட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சரிபார்க்க வேண்டும்.
வீடுகளை சம்பந்தப்பட்ட ஒன்றிய பணி மேற்பார்வையாளர், ஒன்றிய உதவி பொறியாளர் அவ்வப்போது பார்வையிட்டு, அடித்தளம் உள்ளிட்ட நான்கு நிலைகளை ஆய்வு செய்து, வீடு கட்டப்படுகிறது என்ற உண்மை தன்மை குறித்து உறுதி செய்ய வேண்டும்.
பார்வையிட வேண்டும்
பயனாளிகளை அந்த இடத்தில் நிற்க வைத்து படம் எடுத்து, கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில், அவர் கட்டடத்தை பார்வையிட்டு, ஒவ்வொரு தவணை தொகையையும், ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரின், டிஜிட்டல் கையெழுத்துடன் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
வீடு கட்டப்படும் ஒவ்வொரு நிலையையும் கட்டாயம் அதிகாரிகள் பார்வையிட வேண்டும்.
ஆனால், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஆதமங்கலம், கோயில் கண்ணாப்பூர், கொடியாலத்துார், பட்டமங்கலம், தெற்கு பனையூர் மற்றும் வலிவலம் ஆகிய ஊராட்சிகளில், 2016 - 2017ம் ஆண்டு கட்டடமே கட்டாமல், 38 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாக மோசடி செய்யப்பட்டு உள்ளது.
பல கோடி சுருட்டல்
பயனாளிகள் உட்பட எல்லா ஆவணங்களையும் போலியாக தயார் செய்து, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுஉள்ளது.அதேபோல, திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது போல, பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, இந்த ஆண்டு, ஜன., 1ல் இருந்து மே மாதம் வரை, மாவட்ட வாரியாக லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள், 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள், சென்னை ஆலந்துாரில் உள்ள, லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பி உள்ளனர். விரைவில் விசாரணை நடக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.