தமிழக இயற்கை விவசாயிகளுடன் ஆர்வமுடன் உரையாடிய பிரதமர்
தமிழக இயற்கை விவசாயிகளுடன் ஆர்வமுடன் உரையாடிய பிரதமர்
ADDED : ஆக 08, 2025 01:06 AM
சென்னை:தமிழகத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகளுடன், மோடி ஆர்வமுடன் கலந்துரையாடினார்.
டில்லி பார்லிமென்டில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்தில், நேற்று தமிழகத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகளான, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் கருப்பையா, இயற்கை விவசாயிகளான, விதை யோகநாதன், கணபதி அஜிதன், தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் அவரை சந்தித்தனர்.
உற்சாகம் இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட, 'எக்ஸ்' தள பதிவில், 'தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் குழுவை, நேற்று காலை பார்லிமென்டில் சந்தித்தேன். புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தி திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும், புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில், அவர்களின் கவனம் மற்றும் அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தது, உற்சாகம் அளிப்பதாக இருந்தது' என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து, பிரதமரை சந்தித்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் கருப்பையா கூறியதாவது:
வரும் அக்., 16, 17, 18ம் தேதிகளில், கோவை கொடிசியா அரங்கில், இயற்கை விவசாயம் தொடர்பான மாநாடு நடக்க உள்ளது.
அதற்கு அழைப்பதற்காக பிரதமர் மோடியை சந்தித்தோம். எங்களுடன், 15 நிமிடங்கள் மிகவும் ஆர்வமுடன் பேசினார்.
மல்லிகை மாலை, வாழை நாரில் செய்யப்பட்ட சால்வை, சிறுதானியங்களில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை வழங்கினோம்.
கோரிக்கைகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, அதிக நிதி ஒதுக்க வேண்டும்; நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; விவசாயிகளே விற்பனையாளராக மாற அரசு உதவ வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.
விளை பொருட்களை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் வாயிலாக, எப்படியெல்லாம் இயற்கை விவசாயத்தில் லாபம் பெற முடியும் என விவரித்தோம். அனைத்தும் கேட்டு உற்சாகமடைந்த அவர், எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.