ADDED : ஜன 10, 2026 04:56 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சென்னையில் நேற்று சந்தித்து பேசினார்.
இம்மாத இறுதியில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த கூட்டம் குறித்து அ.தி.மு.க., - பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., கடந்த 7ம் தேதி இணைந்தது. அதைத் தொடர்ந்து அன்றைய தினம் டில்லி சென்ற பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது பா.ஜ.,வுக்கு 60 தொகுதிகள் வேண்டும்; கொங்கு மண்டலம், தென்சென்னை, தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகள் வேண்டும்; தேர்தல் வெற்றிக்குப் பின் அமையும் ஆட்சியில் பங்கு வேண்டும்; மூவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அமித் ஷா வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது, அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் முனுசாமி, பா.ஜ., மாநில துணைத் தலைவர்கள் ராமலிங்கம், சக்கரவர்த்தி, ஜெயப்பிரகாஷ், பா.ஜ., பிரிவு அமைப்பாளர் ராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வர உள்ளார். அதற்குள் கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்ற பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு குறித்து, பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
பொங்கல் பண்டிகை முடிந்ததும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல் சென்னை வருகிறார். அப்போது, பா.ஜ.,வுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது.
சந்திப்புக்கு பின், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், “பழனிசாமியுடன் நடந்த பேச்சு சுமுகமாக அமைந்தது. பிரதமர் மோடி, இம்மாத இறுதியில் தமிழகம் வருகிறார். தேதி இன்னும் முடிவாகவில்லை. அந்த பொதுக்கூட்டத்தை, சென்னை அல்லது மதுரையில் நடத்துவது குறித்து விவாதித்தோம்,” என்றார்.

