தூத்துக்குடியில் இன்று பிரதமர் மோடி ரூ.17,300 கோடி பணிகளை துவக்குகிறார்
தூத்துக்குடியில் இன்று பிரதமர் மோடி ரூ.17,300 கோடி பணிகளை துவக்குகிறார்
ADDED : பிப் 28, 2024 07:08 AM

தூத்துக்குடி : தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் இன்று (பிப்.,28) நடக்கும் அரசு விழாவில் பிரதமர் மோடி ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
இவ்விழாவில் ராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ.17,300 கோடி பணிகள்
தூத்துக்குடி துறைமுகத்தில் அவர் துவக்கும் பணிகள் விவரம்: ரூ 7055.95 கோடி மதிப்பில் தூத்துக்குடி வெளித் துறைமுக கட்டுமான பணிகள். கப்பல்களில் குறிப்பாக உள்நாட்டு கப்பல்களில் எரிபொருளாக பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட உள்ளது.
அதற்கான எரிபொருள் மையம் ரூ.1950 கோடி ரூபாய் மதிப்பில் முதன்முதலில் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உருவாகிறது. தூத்துக்குடி 3வது வடக்கு நிலக்கரி தளத்தை இயந்திர மயமாக்கும் பணியை ரூ. 265.15 கோடி மதிப்பில் துவக்கி வைக்கிறார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் தினமும் 5 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ரூ.124.32 கோடி செலவில் அமைகிறது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் பணிகள் ரூ.4586 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு ரயில்வே திட்டப் பணிகள் ரூ 1477 கோடி மதிப்பில் நடக்கவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத்தலமாக்கும் பணிகளையும் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
ரோகிணி ராக்கெட்
பிரதமர் மோடி குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை துவக்கி வைக்கும் நேரத்தில் ரோகிணி ஒலியெப்பும் ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. 200 கி.மீ., விண்ணில் செல்லும் திறன் கொண்ட ஆர்.ஹெச்.200 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
திருநெல்வேலி நிகழ்வு
தூத்துக்குடியில் அரசு விழாவை முடித்துக் கொண்டு இன்று காலை 10:40 மணிக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் திருநெல்வேலி புறப்படுகிறார்.
ஜான்ஸ் கல்லூரி வளாக ஹெலிகாப்டர் தளத்திற்கு காலை 11:05 மணிக்கு வருகிறார். மாவட்ட கோர்ட் வளாகத்திற்கு எதிரே உள்ள பெல் மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் திருவனந்தபுரம் செல்கிறார். திருநெல்வேலி கூட்டத்தில் பா.ஜ., கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

