பிரதமர் மோடி 'ஹாட்ரிக்' சாதனை படைப்பது உறுதி நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு
பிரதமர் மோடி 'ஹாட்ரிக்' சாதனை படைப்பது உறுதி நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு
ADDED : மார் 17, 2024 06:58 AM

சென்னை : 'லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக வென்று, பிரதமர் மோடி, 'ஹாட்ரிக்' சாதனை படைக்கப் போவது உறுதி' என, 'மோடி அண்ட் இந்தியா' நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியர் ராகுல் ஷிவ்சங்கர், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, விஞ்ஞானியும், எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்கள் ராகுல் ஷிவ்சங்கர், சித்தார்த்தா தாலியா ஆகியோர் இணைந்து எழுதியுள்ள, 'மோடி அண்ட் இந்தியா - 2024 மற்றும் பாரதத்திற்கான போராட்டம்' என்ற ஆங்கில நுால் வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது.
வெற்றி
நுாலை வெளியிட்டு பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ''பாரத நாட்டையும், அதன் கலாசாரம், பண்பாட்டையும் காக்க, 100 ஆண்டுகளாக இடைவிடாது ஆர்.எஸ்.எஸ்., போராடி வருகிறது.
''அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே கடந்த, 10 ஆண்டு கால மோடி ஆட்சி. பிரதமர் மோடி இந்திய மக்களின் மனங்களை வென்ற தலைவர். எனவே, மூன்றாவது முறையாக அவர் பிரதமராவது உறுதி,'' என்றார்.
நுாலாசிரியர் ராகுல் ஷிவ்சங்கர் பேசும் போது, ''இடதுசாரிகளும், லிபரல் சிந்தனை உடையவர்களும், பிரதமர் மோடிக்கு எதிரான சிந்தனையை விதைக்க படாதபாடு படுகின்றனர்; அது, எடுபடவில்லை.
''மக்கள் கொண்டாடும் தலைவராக மோடி உருவெடுத்து விட்டார். படிப்படியாக மோடி எப்படி உருவானார், குஜராத் முதல்வராக, பிரதமராக அவர் இந்தியாவை எப்படி கட்டமைத்தார், பாரதத்திற்கான போராட்டத்தில், அவர் எப்படியெல்லாம் போராடுகிறார் என்பதை இந்நுால் எழுதியிருக்கிறோம்,'' என்றார்.
சாதனை
விஞ்ஞானியும், எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன் பேசும் போது, ''கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி மகத்தான சாதனைகள் படைத்து உள்ளார்.
''வீடுகள் தோறும் கழிப்பறை, 10 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு ஆகியவை ஒட்டுமொத்த நாட்டையும் மாற்றியமைத்துள்ளன. எனவே, மூன்றாவது முறையாக வென்று பிரதமர் மோடி 'ஹாட்ரிக்' சாதனை படைக்கப் போவது உறுதி,'' என்றார்.

