பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தாமதம் பணிகளை துவங்காமல் பலரும் தவிப்பு
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தாமதம் பணிகளை துவங்காமல் பலரும் தவிப்பு
ADDED : ஜன 16, 2025 10:04 PM
சென்னை:பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி வழங்குவது தாமதமாகி வருவதால், பயனாளிகள் பலரும் தவித்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் வீடு கட்டுவதற்காக, மத்திய அரசால் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2015ல் துவங்கப்பட்டது. இத்திட்ட உதவியுடன், லட்சக்கணக்கான மக்கள் சொந்த வீடுகளை கட்டி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் சொந்தமாக பயனாளிகளே வீடு கட்டிக்கொள்ளலாம். வீடு கட்ட கடன் வாங்கினால் மானியமும் கிடைக்கும்.
ரூ.2.82 லட்சம் மானியம்
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, பிரதமரின் வீடு கட்டும் 2.0 திட்டம், கடந்தாண்டு துவக்கப்பட்டது. இத்திட்ட பயனாளிகளுக்கு, 2.82 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.
புதிதாக துவக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்திற்கு, பயனாளிகள் பலரும் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால், வீடு கட்டுவதற்கான பணி உத்தரவு வராததால், பயனாளிகள் பலரும் காத்திருக்கின்றனர்.
நடப்பு நிதியாண்டு மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நிதியாண்டே முடியும் நிலையில், இதுவரை பணி உத்தரவு கிடைக்காததால், வீடு கட்டுமான பணிகளை தொடர முடியாமல், பயனாளிகள் தவிக்கின்றனர்.
முந்தைய திட்டத்தில் வீடு கட்டியவர்கள், கட்டுமான பணிகளை நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதை முடித்த பின் தான் புதிய திட்டத்திற்கான உத்தரவு வரும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் மானியம் கிடைக்கும் என்பதால், பலரும் அஸ்திவாரம் வரை கட்டுமான பணிகள் துவங்கி, பணிகளை நிறுத்தியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே கட்டுமான பணிகளை நிறுத்தியுள்ளதால், வீடு கட்டுவோர் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ளனர்.
பணி ஆணைகள்
எனவே, மத்திய அரசு புதிதாக செயல்படுத்தும் 2.0 திட்டத்தில், விரைந்து பணி ஆணைகளை வழங்க வேண்டும் என, பயனாளிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பாண்டு துவங்கி அடுத்த ஆறு ஆண்டுகளில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில், 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்ட, அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதற்காக, ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா, 3.50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 2.82 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மாநில அரசின் பங்களிப்பாக, 1.72 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டு திட்டங்களுக்கும் தேவையான நிதி போதுமான அளவில் உள்ளது.
இலக்கை முடிக்க திட்டம்
எனவே, திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்படி, ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் கலெக்டர்களுக்கு தலைமை செயலர் உத்தரவிட்டு வருகிறார்.
பணிகளை விரைவுபடுத்த, அனைத்து கலெக்டர்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே, மார்ச் மாதத்திற்குள் இலக்கை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.