பிரதமரின் சுதந்திர தின உரை; ஹிந்து முன்னணி வரவேற்பு
பிரதமரின் சுதந்திர தின உரை; ஹிந்து முன்னணி வரவேற்பு
ADDED : ஆக 16, 2025 11:17 PM

திருப்பூர்; சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையை வரவேற்பதாக ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை என்பது வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும். நம் நாட்டின் நிகழ்கால சாதனைகள் மற்றும் எதிர்கால நம்பிக்கைகளை பிரதமர் குறிப்பிடுவார்.
அருமையான நம்பிக்கை தரும் கருத்துகள் உலக அரங்கில் எதிரொலிக்கும் வல்லமை வாய்ந்ததாக இருக்கும்.
இந்தாண்டு சுதந்திர தின சொற்பொழிவில் பிரதமர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டை குறிப்பிட்டு, அரசு சாரா அமைப்பின் சேவையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியதை வரவேற்கிறோம்.
காங்கிரசுக்கு கண்டனம் கடந்த, ஒரு நுாற்றாண்டாக பாரத தேசத்தின் பாதுகாப்பில், இயற்கை இடர்பாடுகளின் போது செய்த சேவையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சீரிய பணி ஒவ்வொரு முறையும் மக்களின் நம்பிக்கையை பெற்றது. காங்., கட்சி தலைவர்கள் சிலர் நுாற்றாண்டு காணும், ஆர்.எஸ்.எஸ்., பற்றி பிரதமர் குறிப்பிட்டதை விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. அன்றைய தலைவர்கள் காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், அம்பேத்கர் என பலரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கட்டுகோப்பான செயல்பாட்டை, தேசபக்தியை, எத்தகைய வேற்றுமையும் இல்லாத ஹிந்து ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான செயல்முறையை மனதார பாராட்டினர்.
தற்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவு மீட்பில் பேரிடர் மீட்பு குழுவினருக்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சேவையாற்ற ஓடோடிச் சென்றதை காண்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வரம்பற்று, பொய்யான விமர்சனங்கள் வைப்பதைக் கண்டிக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.