பிரதமரின் ஜவுளி பூங்கா திட்டம்; உள்கட்டமைப்பு பணிகள் தாமதம்
பிரதமரின் ஜவுளி பூங்கா திட்டம்; உள்கட்டமைப்பு பணிகள் தாமதம்
ADDED : ஜூலை 07, 2026 04:04 AM

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்காவில், உள்கட்டமைப்பு பணிகள் மந்தமாக நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில், ஜவுளி துறை தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், 1,052 ஏக்கரில் பி.எம்.மித்ரா, அதாவது பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்திக்கான தொழில் பூங்காவை, 'சிப்காட்' எனப்படும் தமி ழக தொழில் முன்னேற்ற நிறுவனம், மத்திய அரசுடன் இணைந்து அமைக்கிறது.
இந்த பூங்கா, 1,894 கோடி ரூபாய் செலவில் பணியாளர்கள் தங்கும் விடுதி, தயார் நிலை தொழிற்கூடம், திரவ வெளியேற்றம் இல்லாத பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக, 437 கோடி ரூபாயில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, 2025 டிசம்பரில், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், பணிகள் மந்தமாக நடக்கின்றன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்கட்டமைப்பு பணிகள் தாமதமாக நடப்பதற்கு, வடிவமைப்புக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே காரணம் என, தெரியவந்துள்ளது. இது குறித்து, விரிவாக விசாரணை நடத்தி, பணிகள் முடுக்கி விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
