சென்னை விடுதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை; எஸ்.சி., - எஸ்.டி., மாணவ - மாணவியர் புகார்
சென்னை விடுதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை; எஸ்.சி., - எஸ்.டி., மாணவ - மாணவியர் புகார்
ADDED : மே 12, 2025 07:08 AM
சென்னை : 'சென்னையில் உள்ள விடுதிகளுக்கு மட்டுமே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் முன்னுரிமை தருகின்றனர். பிற மாவட்டங்களில் உள்ள விடுதிகளை கண்டு கொள்வதில்லை' என, எஸ்.சி., - எஸ்.டி., விடுதி மாணவ, மாணவியர் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், விளிம்பு நிலையில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவியருக்கு 1,141; கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 190 என, 1,331 விடுதிகள் தமிழகம் முழுதும் செயல்படுகின்றன.
குற்றம்
இவற்றில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரசு தரப்பில் உணவு கட்டணம், வரவேற்பு பெட்டகம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை என, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
பொதுவாக, எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியர் விடுதியில், உணவு, தண்ணீர், சுற்றுச்சுவர், கழிப்பறை, இரவு நேர காவலாளி தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்தப் பிரச்னைகளை சரிசெய்யக்கோரி, மாணவ, மாணவியர் அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள, 21 விடுதிகளை சேர்ந்த, 2,500 மாணவ, மாணவியருக்கு மட்டுமே, அதிகாரிகள் முன்னுரிமை தருகின்றனர்.
திருநெல்வேலி, கோவை, கடலுார், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்படும் விடுதிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என, எஸ்.சி., - எஸ்.டி., கல்லுாரி விடுதி மாணவ, மாணவியர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுபற்றி, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த விடுதி மாணவ, மாணவியர் சிலர் கூறியதாவது:
எஸ்.சி., - எஸ்.டி., கல்லுாரி மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், சென்னையில், 44 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய விடுதியை அரசு திறந்துள்ளது.
இவ்விடுதியில் உணவருந்தும் கூடம், கண்காணிப்பாளர் அறை, பராமரிப்பாளர் அறை, நுாலகம், பன்னோக்கு கூடம் என, பல்வேறு நவீன வசதிகள் இருப்பது மகிழ்ச்சி. ஆனால், இங்குள்ளவற்றில், 10 சதவீத உள்கட்மைப்பு வசதியையாவது, மற்ற விடுதிகளிலும் அரசு ஏற்படுத்தி இருக்க வேண்டும்; அதைச் செய்யவில்லை.
தீர்வு
சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மாணவியர் விடுதிகளில், இரவு நேர காவலாளி கிடையாது. பல மாணவியர் விடுதிகளில், சுற்றுச்சுவர், நாப்கின் இயந்திரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
இதுகுறித்து, போராட்டங்களில் ஈடுபடும் போது மட்டும், அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். அதன்பின் கண்டு கொள்வதில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், மற்ற மாவட்டங்களில் உள்ள விடுதிகளில், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.