காவல் துறைக்கு தரும் சலுகைகள், நலத்திட்டங்கள் குற்றவாளிகளை கையாளும் எங்களுக்கும் கிடைக்குமா சிறை காவலர்கள் எதிர்பார்ப்பு
காவல் துறைக்கு தரும் சலுகைகள், நலத்திட்டங்கள் குற்றவாளிகளை கையாளும் எங்களுக்கும் கிடைக்குமா சிறை காவலர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 13, 2025 04:18 AM
மதுரை : தமிழக காவல்துறைக்கு தரும் முக்கியத்துவம், நலத்திட்டங்கள், சலுகைகளை தினமும் பல்வகை குற்றவாளிகளை கையாளும் தங்களுக்கும் வழங்கப்படுமா என சிறை காவலர்கள் எதிர்பார்க்கின்றனர். சிறைத்துறை மானிய கோரிக்கையின்போது ஏதாவது சலுகை அளிக்கப்படும் என காத்திருந்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என வேதனை தெரிவித்தனர்.
போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நலத்திட்டங்களை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் சமீபத்தில் அறிவித்தார். இதன்படி உடல்நலம் காப்பீடு திட்டம் போலீஸ் நலநிதியில் இருந்து பெரிய நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிவாரணம் மூலம் ரூ.8 லட்சம், குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் சிறை நல நிதியில் இருந்து காவலர்களுக்கு பணம் பெற்று தருவதில் டி.ஜி.பி., அலுவலகத்திலும், மத்திய சிறைகளிலும் வெளிப்படை தன்மை இல்லை என்கின்றனர் சிறை காவலர்கள்.
அவர்கள் கூறியதாவது:
போலீஸ் துறையில் மரணமோ, ஊனமோ ஏற்பட்டால் ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கருணைத்தொகை வழங்கப்படுகிறது. சிறைத்துறையில் கீழ்நிலை காவலர்களுக்கு பலன் கிடைப்பதில்லை. அமைச்சுப் பணியாளர்கள், அதிகாரிகள் பயன்பெறுகிறார்கள். போலீசிற்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் 13 இடங்களில் 'ஆயுதப்படை மருத்துவமனை' இயங்குகிறது. சிறைத்துறைக்கென ஒரு கிளினிக்கூட இல்லை.
போலீசின் பிள்ளைகள் 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் ரூ.12,500 முதல் ரூ.25,000 வரை உயர்கல்வி படிக்க வழங்கப்படுகிறது. சிறைத்துறையில் அத்திட்டம் மூடி மறைக்கப்படுகிறது. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படுகிறதா, வேறு வழியில் செலவிடப்படுகிறதா என மர்மமாக உள்ளது. போலீசிற்கு வாரந்தோறும் முகாம் நடத்தி குறைகளை கேட்டு அதிகாரிகள் தீர்வு காண்கிறார்கள். ஆனால் சிறைத்துறையில் இதுபோன்ற முகாம் அடிக்கடி நடத்தப்படுவது கிடையாது.
மனஅழுத்தத்தில் காவலர்கள்
சமீபத்தில்கூட நீண்டநாள் ஒரே இடத்தில் பணியாற்றிய காவலர்கள், உதவி ஜெயிலர்கள் சிலர் 400 கி.மீ.,க்கு அப்பால் இடமாற்றப்பட்டனர். உடல்நலம் பாதித்து மருத்துவ விடுப்பில் இருந்த சிலர் சென்னை சென்று டி.ஜி.பி.,யிடம் முறையிட்டும் பலனில்லை. இதுபோன்று ஒவ்வொருவருக்கும் பல சூழல்களால் மனஅழுத்தத்திற்குள்ளாகி உள்ளனர்.
தினமும் சிறையில் பல்வேறு குற்றவாளிகளை கையாண்டு வருகிறோம். எங்களுக்கு அவர்களால் அச்சுறுத்தல் இருப்பது உண்மை. போலீசிற்கு வழங்கப்படும் சலுகை, பாதுகாப்பு திட்டங்களை எங்களுக்கும் வழங்க வேண்டும். நாங்களும் சீருடை பணியாளர்கள்தானே. பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறைத்துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் ரகுபதி எங்களுக்கு சலுகைகள் அறிவிப்பார் என எதிர்பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. சட்டசபை தேர்தலில் இது எதிரொலிக்கும்.
இவ்வாறு கூறினர்.