ADDED : நவ 06, 2024 10:50 PM
சென்னை:திருட்டு பட்டம் சுமத்தி, ஆயுள் தண்டனை கைதியை தனிமை சிறையில் அடைத்து, சித்ரவதை செய்தது தொடர்பாக, சிறைக் காவலர்கள், 11 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்தவர் சிவகுமார், 30. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அவரை வேலுார் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, தனது வீட்டு வேலைக்கு அமர்த்தினார்.
அப்போது, தன் வீட்டில் இருந்த, 4.25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதாக, சிவகுமார் மீது குற்றம் சாட்டினார்.
அதைத் தொடர்ந்து, அவருடன் சேர்ந்து, வேலுார் மத்திய சிறை கூடுதல் எஸ்.பி.,யாக இருந்த அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்ட 14 பேர், கைதி சிவகுமாரை, தனிமை சிறையில் அடைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கைதி சிவகுமார், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, டி.ஐ.ஜி., ராஜலட்சுமியின் தனி பாதுகாவலர் ராஜு உட்பட, சிறை காவலர்கள் 11 பேரை சஸ்பெண்ட் செய்து, சிறைத் துறை இயக்குனர் மகேஷ்வர் தயாள், நேற்று உத்தரவிட்டுள்ளார்.