ADDED : மார் 20, 2025 05:45 AM

கடலுார் : கடலுாரில் சிறை கைதிகள், கோழி இறைச்சி விற்பனையை துவங்கியுள்ளனர்.
கடலுார் கேப்பர் மலையில் 178 ஏக்கரில் மத்திய சிறை உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் கைதிகள் மூலம் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. மேலும் கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவை வளர்க்கப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள், மத்திய சிறையில் மலிவு விலையில் விற்கப்படுகிறது.
தற்போது கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் இயங்கிய கிளை சிறையில் இருந்த கைதிகள், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த கிளை சிறையில், நேற்று முதல் மத்திய சிறை கைதிகள் மூலம் கோழி இறைச்சி விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
கிலோ ரூ.170 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது.
கைதிகள் மூலம் விற்பனை செய்யப்படும் இறைச்சி, வெளி மார்க்கெட்டில் விற்கப்படுவதை விட குறைவாக இருந்ததால், மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.