அரசு பஸ் கிளை மேலாளர் லஞ்சம் கேட்பதாக தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் புகார்
அரசு பஸ் கிளை மேலாளர் லஞ்சம் கேட்பதாக தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் புகார்
ADDED : ஆக 17, 2025 02:11 AM
ஆத்துார், ஆக. 17
அரசு பஸ் கிளை மேலாளர், லஞ்சம், மதுபானம் கேட்பதாக, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள், முதல்வருக்கு அனுப்பிய புகார் மனு, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்துார் வட்டார தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் நலச்சங்க தலைவர் சங்கர், செயலர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலின், சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு அனுப்பிய மனு, சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. அதில் குறிப்பிட்டுள்ள விபரம்:
ஆத்துார் போக்குவரத்து கிளை பணிமனை நேர கண்காணிப்பாளர் பாலசுப்ரமணி, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களை தகாத வார்த்தையில் திட்டுவது, மிரட்டுவது, சில நேரங்களில் பஸ்களை இயக்க விடாமல் நெருக்கடி கொடுக்கிறார். அவரிடம் கேட்டால் மாதந்தோறும் உயர்தர மதுபாட்டில் ஒரு புல், ஆத்துார் கிளை மேலாளர் வெங்கடேசனுக்கு, மாதம் ஒருமுறை, 3,000 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என, நிர்பந்தம் செய்கிறார்.
இது டிரைவர், கண்டக்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. 2014ல், பாலாஜி என்பவரை வைத்து, வெங்கடேசன் இதே பிரச்னை செய்து வந்தார். இவர்கள் மீது போலீசில் வழக்கு பதிய மறுத்து சமாதானம் பேசி அனுப்புகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெங்கடேசன் கூறியதாவது:
தனியார் பஸ்கள், கூடுதல் நேரம் பஸ் ஸ்டாண்டில் இருந்தால், சரியான நேரத்தில் இயக்கும்படி கூறுகிறோம். இதனால் எங்கள் மீது பொய் புகார் கூறுகின்றனர். கடந்த ஜூலை 22ல், இந்த புகாரை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்ததால் விசாரணை நடந்தது. அதில் உண்மை இல்லை என தெரிந்தது. அந்த புகார் மனுவை, தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
பொய் தகவலுடன் உள்ளதால், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, ஆத்துார் டி.எஸ்.பி.,யிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நான் எதற்காக, இவர்களிடம் பணம் கேட்க வேண்டும். மதுபாட்டில் கேட்பதாக பொய் புகார் அனுப்பியுள்ளனர். உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளோம். போலீசார் மூலம், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறுமியிடம் சீண்டல்