முதல்வர் காப்பீட்டை தனியார் மருத்துவமனை ஏற்பதில்லை: ம.தி.மு.க., சதன் திருமலை குமார்
முதல்வர் காப்பீட்டை தனியார் மருத்துவமனை ஏற்பதில்லை: ம.தி.மு.க., சதன் திருமலை குமார்
ADDED : ஏப் 22, 2025 07:08 AM
சென்னை : ''தனியார் மருத்துவமனைகளில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தை ஏற்பதில்லை,'' என, ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன் திருமலை குமார் குற்றஞ்சாட்டினார்.
சட்டசபையில் நேற்று மருத்துவத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
ஏழைகளுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், சில தனியார் மருத்துவமனைகள், முதல்வர் காப்பீட்டு திட்டத்தை ஏற்பதில்லை.
மேலும் சில மருத்துவமனைகள், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் பணம் போதாது எனக் கூறி, சில நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விடுகின்றன. முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டையுடன் செல்லும் ஏழைகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும், அனைத்து நோய்களுக்கும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.