பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பு
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பு
ADDED : ஏப் 07, 2025 01:06 AM
சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பது, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், மாநில கல்வி திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்துள்ளது. இந்த ஆண்டு இரண்டு வகுப்புகளிலும் சேர்த்து, 16 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுதி உள்ளனர். இவர்களில், பாதி மாணவர்கள் தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 4ம் தேதி துவங்கியது. இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை சேர்ந்த மூத்த ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் நாளான, 4ம் தேதி, முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மேற்கொண்டனர். மறுநாள் முதல் உதவி தேர்வாளர்கள், விடைத்தாள் மதிப்பீட்டு பணியை செய்கின்றனர்.
விடைத்தாளில் ஒவ் வொரு விடைக்கும், உரிய மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதா; பக்கம் வாரியாக மதிப்பெண்கள் சரியாக உள்ளனவா, மொத்த மதிப்பெண்களின் கூடுதல் சரியாக உள்ளதா என்பதை, கூர்ந்தாய்வாளர் சரிபார்க்கிறார். இப்பணியில் அரசு பள்ளி, மூத்த ஆசிரியர்கள் மட்டும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுதும் விடைத்தாள் திருத்தும் பணியில், உதவி தேர்வாளர் பணிக்கு நியமிக்கப்பட்ட, தனியார் பள்ளி முதுநிலை ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பணிக்கு வரவில்லை. இதனால், பல மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பணிக்கு வராத ஆசிரியர்களின் மொபைல் எண்களை, அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது, அவர்கள் பதில் அளிக்கவில்லை.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
தனியார் பள்ளி ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பது பல ஆண்டுகளாகவே தொடர்கிறது.
அவர்கள் தங்கள் பள்ளிகளில், பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவர்களுக்கு, பிளஸ் 2 வகுப்புகள் நடத்துவது, பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தருவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு, தனி இயக்குநரகம் உள்ளது. எனினும், அப்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இல்லை. தனியார் பள்ளிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளின் உத்தரவுகளை மதிப்பதில்லை.
ஆசிரியர் போட்டித்தேர்வு, தகுதித்தேர்வு உள்ளிட்டவற்றை எழுதும் போது, விடைத்தாள் திருத்தும் பணி, மதிப்பீட்டு பணி உள்ளிட்ட கல்வித்துறை நடவடிக்கைகளில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆர்வம் காட்டுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.