தனியார் பள்ளிகள் சங்கம் தமிழகத்தில் புதிதாக துவக்கம்
தனியார் பள்ளிகள் சங்கம் தமிழகத்தில் புதிதாக துவக்கம்
ADDED : டிச 31, 2024 04:59 AM
சென்னை : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தை துவக்கி வைத்து, அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
தமிழகத்தின் கல்வி தரத்தை மேம்படுத்த, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து செயல்பட்டால் தான் முடியும். நான், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்தேன். அப்போது, தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்களின் பள்ளிகளிலும் ஆய்வு செய்யும்படி கூறினர்.
அதை ஏற்று, அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்தேன். காரணம், தமிழகத்தில் உள்ள 1.24 கோடி மாணவர்களின் பாதுகாப்புக்கும் தமிழக அரசு தான் பொறுப்பு என்பதால், உங்களின் கோரிக்கைகளை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கு தனியாக இயக்குனரகம் உருவாக்கப்பட்டது; தொடர்ந்து, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
இங்கு, நர்சரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான தொகையை அந்தந்த ஆண்டிலேயே வழங்க வேண்டும். சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கான சுதந்திரம் வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும் போது, நிலுவையை வசூலிக்கும் உரிமை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள்.
மத்திய அரசின் நிதி கிடைப்பதில் சிரமம் உள்ள நிலையில், சட்ட நிபுணர்களுடனும், முதல்வருடனும் ஆலோசித்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். நீங்கள் அரசு பள்ளிகளுக்கு வாருங்கள், நாங்கள் உங்கள் பள்ளிகளுக்கு வருகிறோம். இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் நல்ல விஷயங்களை கற்று, மாணவ சமூகத்தை உயர்த்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.