ADDED : ஜன 03, 2024 12:06 AM

சென்னை:தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில், இணை இயக்குனராக பணியாற்றி வரும், பிரியா ரவிச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சேலத்தை சேர்ந்தவர், பிரியா ரவிச்சந்திரன். இவர், சேலத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை எத்திராஜ் கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பையும், புதுடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலையில் முதுகலை மற்றும் எம்.பில்., பட்டமும் பெற்றார்.
கடந்த, 2003ல், தமிழக அரசின்,'குரூப் -1' அதிகாரி ஆனார். நம் நாட்டில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் சேர்ந்த, முதல் பெண் அதிகாரிகள் இருவரில், இவரும் ஒருவர்.
துடிப்பு மிக்கவரான பிரியா ரவிச்சந்திரன், தற்போது தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். 'குரூப் -1'அரசு அதிகாரிகள் சில காலி இடங்களுக்கு, மாநில அரசின் பரிந்துரையின்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமனம் செய்யப்படுவர்.
அந்த வகையில், 2022 கேடரில், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் எனும் ஒதுக்கீட்டில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பிரியா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் வரலாற்றில், தீயணைப்பு துறையில் பணியாற்றி வரும் ஒரு அதிகாரி, ஐ.ஏ.எஸ்., நிலைக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை.
கடந்த 2012, ஜனவரியில், பொங்கல் பண்டிகையின் போது, சென்னை சேப்பாக்கத்தில், பாரம்பரியமிக்க எழிலகம் கட்டடத்தில், மிகப்பெரிய தீ விபத்து நடந்தது.
உயிரை பணயம் வைத்து தீயை அணைக்க முயன்ற பிரியா ரவிச்சந்திரன் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இவரின் வீர தீர செயலுக்கு, ஜனாதிபதி பதக்கமும் அறிவிக்கப்பட்டது.