ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புதைந்து கிடக்குது பரம ரகசியம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புதைந்து கிடக்குது பரம ரகசியம்!
UPDATED : ஜன 14, 2025 12:50 PM
ADDED : ஜன 14, 2025 12:46 PM

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க.,வுக்கு விட்டுக்கொடுப்பதற்கு என்ன காரணம் என்பதை வெளியில் சொல்ல முடியாது என்று, செல்வப்பெருந்தகை கூறியிருப்பதை, 'நெட்டிசன்'கள் பலரும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி, காங்கிரஸ் கட்சி வசம் இருந்தது. முதலில் திருமகன் ஈ.வெ.ரா., வென்ற இந்த தொகுதியில், அவரது மறைவுக்கு பிறகு ஈ.வேகே.எஸ்., இளங்கோவன் வென்றார். இப்படி இரண்டு முறை வென்ற தொகுதியில், இந்த முறை காங்கிரஸ் போட்டியிடாமல், தி.மு.க., போட்டியிடுகிறது.
இது பற்றி தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற ஈரோடு கிழக்கு தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது தான் உண்மையான தோழமை. வரும் 2026 சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை தி.மு.க., கொடுக்கும்; அதற்கான நம்பிக்கை எங்களிடம் உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறோம் என்றால், இன்னொரு உதவியையோ, உரிமையையோ காங்கிரசுக்கு தி.மு.க., கொடுக்கும்; அதை வெளியில் சொல்ல முடியாது.
*டவுட் தனபாலு கருத்து:* அது சரி... ஒரு வருஷம் மட்டுமே எஞ்சியிருக்கிற எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிட, உங்க கட்சியில் யாரும் முன்வரலை... இதை வெளியில சொன்னா நல்லாயிருக்காதுன்னு, தி.மு.க.,வுக்கு விட்டு கொடுத்துட்டு, கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத மாதிரி பேசுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!